உலக பூமி தினம்- 18.04.2021
- Author --
- Wednesday, 14 Apr, 2021
உலக பூமி தினம்
அருள்சகோதரர் பிரவின் குமார்.,, சேச
JPLI, கஸ்தம்பாடி
பூமி, எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகு. அடர்ந்த மரங்கள், பசுமைப் புல் போர்த்திய மலைகள், வண்ணமலர்கள் நிறைந்த சோலை, முகத்தைப் பிரதிபலிக்கும் தூய்மையான நீர்நிலைகள், இதயத்தை அள்ளிச் செல்லும் கடற்கரைகள், பசுமைக் கம்பளிவிரித்த வயல்வெளிகள், துளித் துளியாய் நீர்திவலைகள் பரவும் அருவிகள், பாறங்கல் தலைமீது விழுவதுப் போன்ற அனுபவம் தரும் நீர்வீழ்ச்சிகள், நடக்க நடக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அடர்வனங்கள் இன்னும் பல. இவையாவும் நிறைந்ததுதான் நம் மனதை ஆக்கிரமிக்கும் பூமியைக் குறித்த எண்ணம். இந்தப் பூமியைச் சிறப்பிக்கத் தான் இந்தநாள்.
ஆண்டு முழுவதும் ஒரு மனிதன் என்னதான் ஓடிஓடி உழைத்தாலும், ஆண்டின் இறுதியில தேடிப் போவது இந்த இயற்கையைத்தான். இதை எல்லாரும் ஏத்துக்குவீங்கன்னு நம்புறேன். ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, இராமேஸ்வரம், ஏற்காடு என இந்த இயற்கைச் சார்ந்த இடங்கள் தான் நம்முடைய சுற்றுலாத் தலங்கள். அந்தநாலு செவத்தவிட்டு வெளிய கௌம்புனா மனசு அடையிர மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. குழந்த முதல் பெரியவங்கவரை எல்லாரும் சுற்றுலான்னு சொன்னலே ரொம்ப ஒளிமயமா ஆயிடுவாங்க. என்னதான் நாம் தொலைக்காட்சி, திரையரங்கு, கேளிக்கைக் கூடங்கள்னு போனாலும் இந்த இயற்கைச் சார்ந்த இடங்கள்ளகிடைக்கிற மகிழ்ச்சி வேற எங்கயும் கிடைக்கிறதில்ல. ஏன் இந்த மனதுக்கும் இயற்கைக்கும் இப்படி ஒரு தொடர்பு? இந்தக் கேள்விய உங்களுக்குள் ஏற்கனவே கேட்டவங்க, நான் கூறும் பதில் சரியானுபாருங்க. இந்தக் கேள்விய இதுவரைக் கேட்காதவங்க, இப்பக் கேட்டுப் பாருங்க.
நம்மனது இயற்கையில அதிக மகிழ்ச்சி அடைய இரண்டு காரணம் இருக்கலாம். 1. அதுவரை குறுகிய நாலு செவத்துக்குள்ள வாழ்ந்துட்டு பெரியப் பரப்புக்கு வருவது ஒருவிதமான சுதந்திர உணர்வக் கொடுக்குது. 2. மனிதன் என்னதான் தன்னை, அவன் உருவாக்கிய பொருட்களோட ஐக்கியப்படுத்தினாலும் அது நிரந்தரம் அற்றது. அதேநேரத்துல, இயற்கை அவனோட பங்காளி. இயற்கையும் நாமும் நம்மைக் கடந்த ஓர் ஆற்றலால உருவாக்கப்பட்டது. சுருக்கமா சொல்லனும்னா, நம்மக்கூடப் பிறந்தவங்ககிட்ட நாம எளிமையா ஒட்டிகிறதும், பிறரிடம் சற்றுவிலகியிருப்பதும் இயல்புதானே, அதுபோலத் தான்.
பூமிதினத்தில பூமியப் பத்திபேசியாச்சு, பூமிக்கும் நமக்கும் இடையேயான உறவப்பத்திப் பேசியாச்சு. அவ்வளவுதானா, இது தான் பூமிதினக் கொண்டாட்டமா? அதுதாங்க இல்ல. இப்பத்தான் முக்கியமான செய்தியே இருக்கு. அப்புடி என்ன செய்தி. அடுத்த பத்தியில தெரிஞ்சுகிறுவோம்.…
பூமின்னு சொன்ன உடனே அதனுடைய ரம்யமும், அழகும் தான் நம்முடைய கண்களுக்கு முன்னாடி வந்துச்சு. அதுசரிதான். ஆனா, நாம பாக்குர பூமி உண்மையாகவே இதே பிம்பத்தோடதான் இருக்கா? இது பெரியக் கேள்விக் குறிதான். பாதுகாக்கப்பட்டப்பகுதி, சுற்றுலாப் பகுதின்னு அறிவிக்கப்பட்டப் பகுதிகள் மட்டும் தான் ஏறக்குறைய அந்த அழகியப் பிம்பத்தோட இருக்கு. மற்ற இடங்கள் எல்லாம் எப்புடி இருக்குன்னு நமக்கே நல்லாத் தெரியும். இன்னைக்கு ஏறக்குறைய நாம எல்லாருக்குமே இந்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால ஏற்படும் பிரச்சனைகள நல்லாவே தெரிஞ்சு இருக்கும். அதிலும் குறிப்பா இந்த கொரோனா கால ஊரடங்கு, இயற்கை தன்னையே எப்புடிபுதுப்பிச்சுக் கொண்டுச்சுன்னு நமக்கு தெளிவா விளக்கிடுச்சு. ஓட்டையா இருந்த ஓசோன் படலம் ஏறக்குறைய பழையநிலைக்கு திரும்பியதும், அழுக்கடைந்த நதிகள் பல சுத்தமானதும் நாம் நன்கு அறிந்த கதைகளே.
ஒரு செய்திமட்டும் தெளிவாக தெரியுது. 2019-ம் ஆண்டுவரை ‘இயற்கை நம்மால சீர்கேடு அடையிது. இயற்கை நம்முடைய உரிமைச் சொத்து அல்ல, அதை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கடத்த வேண்டியது நம் கடமை’ என நெறயக் கதைப் பேசினோம். ஆனா இன்று, இயற்கை தன்னைத் தானே புதுப்பிக்க ‘என் வழி தனி வழி’ என்கிற முறையில நமக்குப் பாடம் கற்பித்துவிட்டது. கடைசியில பாதிக்கப்பட்டது நாம தான். நம் செயல்களால இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துறோம்ன்னு அறிவளவில் தெரிஞ்ச நம், அதை செயல் அளவில மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில இருக்கோம். இப்ப முடிவெடுக்க வேண்டியது நாமதான். தொடர்ந்து நம்ம பங்காளி இயற்கைய பயன்படுத்துறோம்ங்கிற பேர்ல நாசம் செய்ஞ்சு நமக்கு நாமே குழி வெட்டுறதா, இல்ல இயற்கையோட இணைந்த வாழ்க்கை வாழ்ந்து ஆரோக்கியமா இருக்கிறதா? முடிவு நம்மக் கையில.
இயற்கையோட வாழ என்ன செய்யனும்? முனிவர்கள் போல காட்டில வாழத்தேவையில்ல. கடைக்குப் போகும் போது ஒரு பையை எடுத்துட்டுபோனா, ஒரு பாலித்தின் பை பயன்பாட்டக் குறைக்கலாம். நடக்குற தூரத்துல இருக்க இடத்துக்கு மோட்டார் வாகனங்களப் பயன்படுத்தாம, கால் நடையாகவோ, மிதிவண்டிலையோ போனா உடலுக்கும் ஆரோக்கியம், காற்று மாசுபாடும் குறையும். நடக்க சோம்பேறித்தனம், எப்புடிப்பா நடக்குறது’ன்னு நீங்க சொல்லுறது கேட்குது. எது எப்புடியோ, நம்ம அடுத்த தலைமுறை இல்ல, நாம நிம்மதியா வாழவே இயற்கையோட இயைந்த வாழ்க்கை ரொம்ப முக்கியம். அது எப்படி சாத்தியமாக்குறதுங்கிறதுக்கு இரண்டு வழிமுறைகளை நான் பகிர்ந்துகிட்டேன். இப்ப இயற்கையோட இணைந்த வாழ்க்கை வாழவேண்டியது, நம்ம எல்லாருடைய கடமை. பிறரிடம் அதற்கான வழிமுறையத் தேடாம, அமைதியா கொஞ்சம் யோசிச்சோம்னா நிச்சயம் பல வழிமுறைகள் நமக்கே தெரியும். பதில நமக்குள்ளத் தேடத் துவங்குவோம்! நம்ம பங்காளி இயற்கையோட, வாய்க்கா தகராறு இல்லாம வாழ நாம் தயாரா?
Comment